ஞாயிறு, 8 டிசம்பர், 2013

டெல்லி - இதுவும் நம்ம மண்ணுதான் - 2

Flashback-2

சுமார் 700 வருடங்கள் டெல்லியின் பக்கங்கள், வெள்ளை மையினால் எழுத பட்டிருக்க வேண்டும். ராஜா டேலுவின்வின் அதிகாரத்திற்க்கு டெல்லி ஆட்பட்ட பின் 736 கி.பி. ஆம் ஆண்டு தோமர் ராஜபுத்திரர்கள் கைப்பற்றும் வரை டெல்லி என்ன ஆனது என்பது அப்பொழுது வாழ்ந்தவர்களுக்கே வெளிச்சம்.

தோமர் ராஜபுத்திரர்கள்:

தோமர் ராஜபுத்திரர்கள் பற்றி ஒரு சுவையான வரலாறு உள்ளது. 

அர்ஜுனனின் பேரன் பரிக்க்ஷித், குரு வம்சத்தை ஆண்டு வந்தார். அப்பொழுது இந்த்ரபிராஸ்தம் ஒரு முக்கியமான நகரமாக இருந்தது. அவரது பரம்பரையினர் வழி தொடர்ந்தனர்.

சுமார் 300 கி.மு. ஆம் ஆண்டு மன்னன் ஷேமக்கை,  அவன் அமைச்சர் கொலை செய்து ஆட்சியை கைப்பற்றினார்.பின்னர் தோமர் ராஜவம்சம் கோதாவரி நதிக்கரை ஓரம் நகர்ந்து, ஒரு சின்ன நாட்டை உருவாக்கி ஆட்சி செய்தனர்.

 736 கி.பி. ஆம் ஆண்டு ஆனங்பால்-I என்னும் தோமர் வம்சத்து மன்னன் , மீண்டும் ஹரியானாவை கைப்பற்றி , தில்லிகவை (டெல்லி) தலைநகராக கொண்டு ஆட்சி நடத்தினார். 

ஒரு கோட்டையை கட்டி, அதற்கு லால் கோட் (சிவப்பு கோட்டை) என பெயரிட்டார். அங்கு கோவில் பல கட்டினார், நான்காம் சந்திரகுப்தர் காலத்து இரும்பு தூணை நிறுவினார். அந்த தூண் இன்றளவும் துரு பிடிக்காமல் இருப்பது, இந்தியர்களின் நுட்பமான அறிவிற்கு சிறந்த சான்றாகும்.  



1051 குதுப் மினார் பகுதில் உள்ள இரும்புத் தூண்.

1051 கி.பி. ஆம் ஆண்டு ஆனங்பால்-II, அந்த கோட்டையை விரிவு படுத்தினார். 

12 ஆம் நூற்றாண்டு மத்தியில், சௌஹான் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்த விக்ரஹராஜா III, தோமர்களுடன் போரிட்டு டெல்லி அரியணையை கைப்பற்றினார்.

சௌஹான் ராஜபுத்திரர்கள்:

விக்ரஹராஜா III பரம்பரையில், 1168 கி.பி. ஆம் ஆண்டு பிறந்தவர்தான் பிரிதிவ்ராஜ் சௌஹான், அவர்  வித்தையில் சிறந்து விளங்கினார். இலக்கின் ஒளியை வைத்தே அதை சரியாக தாக்கும் அளவிற்கு அசாத்திய திறமை உடையவராக இருந்தார்.

தனது பதிமூன்றாம் வயதில் டெல்லி-அஜ்மீர் என் இரட்டை தலைநகரை கொண்டு ஆட்சி நடத்தினார். 

நமது இந்திய வரலாற்றில் ஷஹஜஹான் - மும்தாஜ் ஜோடிக்கு போட்டி போட்ட இன்னொரு காதல் ஜோடி, பிரிதிவ்ராஜ் சௌஹான் - சம்யுக்தை.

இவர்களின் காதல் கதை நாம் அனைவரும் அறிந்ததே, அறியாதவர்களுக்காக ஒரு சின்ன முன்னுரை.


(சம்யுக்தையின் சுயம்வரத்திற்கு, அவள் அப்பா, கன்னோஜ் மன்னன்  ஜெயசந்திரா, பிரிதிவ்ராஜை  அழைக்கவில்லை, சம்யுக்தைக்கோ பிரிதிவ்ராஜ் மேல் காதல், பிரிதிவ்ராஜ்க்கும் தான், சுயம்வரத்தின் பொழுது பிரிதிவ்ராஜ் போரிட்டு சம்யுக்தையை குதிரையில் தூக்கிச் சென்றார்.)  

பிரிதிவ்ராஜ், லால் கோட் கோட்டையை இணைத்து, மிக பெரிதாக ஒரு கோட்டையை கட்டி, அதற்கு ராய் பித்தோரா (Rai Pithora) என பெயரிட்டார்
அந்த கோட்டை 8 கி.மி. சுற்றளவு கொண்டது.


                                                   ராய் பித்தோராவின் வரைபடம்.

                       

பிரிதிவ்ராஜ் சௌஹான் சிலை, ராய் பித்தோரா இருந்த இடத்தில பா.ஜ.க. ஆட்சில் நிறுவப்பட்டுள்ளது . 

ராஜபுத்திரர்களிலேயே சிறந்த மன்னராக விளங்கினார். அவர் பல போர்களில் வெற்றி பெற்றார். அதில் குறிப்பிடும்படியானது, குஜராத் பீம்தேவ் ஸொலன்கியுடன் நடந்த போர், உத்தர் பிரதேஷ் மஹோபா நாட்டுடன் நடந்த போர், டரைன் போர். 

முதலாம் டரைன் போர், கி.பி. 1191ல் ஆப்கானில் இருந்து படை எடுத்து, டெல்லியை அபேஸ் பண்ண வந்த முஹம்மத் கோரியை வென்றார், அவரிடம் உயிர்பிச்சை கேட்டான் கோரி. மன்னித்து விடுதலை அளித்தார் பிரிதிவிராஜ்.
நம்ம ஆளுங்கள்ட்ட இருக்கிற கெட்ட பழக்கமே இது தான்யா. 

இந்தியாவின் சரித்திரமே அந்த மன்னிப்பில் மாறியது, மீண்டும் கி.பி. 1192ல் கோரி படை எடுத்து வந்து, பிரிதிவ்ராஜின் மாமனார், கன்னோஜ் மன்னன் ஜெய சந்திரா உதவியுடன் பிரிதிவ்ராஜை வீழ்த்தினான்.  

பிரிதிவ்ராஜ் சவுஹானே, டெல்லியின் கடைசி ஹிந்து மன்னன் ஆவார்.
அவரின் கதை இன்றளவும் வடஇந்தியாவில் பிரசித்தம். ராஜஸ்தான், ஹரியானா, உத்தர் பிரதேஷ கிராமங்களில் நாட்டுபுற பாட்டில் அவர்தான் ஹீரோ. வரலாறு முக்கியம் அமைச்சரே......... 

ராய் பித்தோர (லால் கோட்) கோட்டையை, டெல்லியின் இரண்டாவது நகரம் என குறிப்பிடலாம். 

இன்றளவும் லால் கோட் கோட்டையின் மிச்சங்களை நாம் மேஹருளி, சாகேத், கிசான்ஹார் மற்றும் வசந்த் குஞ் ஆகிய இடங்களில் காணலாம்.

பி.கு.

டெல்லியில் எங்கள் வீட்டு உரிமையாளர் பெயரும் சௌஹான் தான், அவருக்கும் பிரிதிவிராஜ் சௌஹானுக்கும் எதாவது சம்பந்தம் உண்டா என்று விசாரிக்க வேண்டும். 


                                                                                                                   - தொடரும் 

                                                                                                      மகேஷ் பிரபு விஜயராஜ் 









     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக