வியாழன், 13 நவம்பர், 2014

பயணங்கள் பலவிதம் - 2


பயணத்தோட ஆரம்பத்தையும் தெரிஞ்சிக்க இங்கே ஒரு தட்டு தட்டுங்க ....


புடாபெஸ்ட் என்பது புடா மற்றும் பெஸ்ட் என்னும் இரு நகரங்கள் சேர்ந்ததாகும். இந்த இரு நகரங்களுக்கு இடையே தானுபே (Danube) என்னும் நதி ஓடுகிறது.

Chain Bridge, புடாபெஸ்ட்ல் பார்க்க வேண்டிய முக்கியமான இடம், இந்த பாலம் 1820 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இதற்க்கு முன்பு வரை மரக்கட்டைகளால் ஆன பாலம் இருந்தது, இதை ஒவ்வொரு குளிர் காலத்திலும் அப்புறபடுத்தி விடுவார்கள். (குளிரியில் மரக்கட்டைகள் உடைந்துவிடும் என்பதால்), இதை Pontoon Bridge என்பார்கள்

(ரெம்ப அறிவாளின்னு நினைக்கதீங்க, கூகிளாண்டவர்  சொல்லித்தான் எனக்கு தெரியும், நினைக்க மாட்டீங்கள்ள ??? ).



                                         பட உதவி : நம்ம கூகிளாண்டவர் தான்

Count István Széchenyi என்று, ஒரு ஹங்கேரியன் புரட்சியாளர் இருந்தார், அவர் தந்தை ஆற்றின் மறுகரையில் இறந்து போனார். குளிர் காலம் என்பதால் இவரால் ஆற்றை கடக்க  முடியவில்லை. அப்பொழுது தான் ஒரு நிரந்தர பாலத்தை உருவாக்க முடிவு செய்தார். 

பாலத்தின் இருகரையிலும், இரண்டு சிங்க சிலைகளை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த சிங்கங்களுக்கு பின்னால் ஒரு கதை உள்ளது.

இதை Marschalko Janos என்பவர் வடிவமைத்தார். அவர் சிங்கங்களுக்கு நாக்கை செதுக்க மறந்து விட்டார், இதை பாலத்தின் திறப்பு விழாவின் சமயத்தில் ஒரு சிறுவன் கவனித்து சொன்னான். மனம் வெறுத்து போய் தானுபே ஆற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.


இது தான் அந்த சிங்கம் 



புடாபெஸ்ட்ல் எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.


Chain Bridge 




                                                       புடாபெஸ்ட் கோட்டை 





சர்ச்சும், பாராளுமன்றமும் ஒரே உயரம் வருமாறு கட்டி இருக்கிறார்கள்.

கடவுளும், அரசாங்கமும் ஒன்று என்ற நம்பிக்கையை காட்டவாம்.

என்னோட வலது பின்பக்கம் இருக்கிறது பாராளுமன்றம், இடது பின்பக்கம் சர்ச்.



                                                     பாராளுமன்றம்



Limousine Car, ஒரே இடத்துல 2 கார் நிக்கிறத பார்த்து ரெம்ப பீலிங்க்ஸ் போங்க   


இரவு 11 மணிக்கு ஹோட்டலுக்கு வந்து அதிகாலை 5 மணிக்கு (அடுத்த நாளும் தூக்கம் போச்சு) எழுந்திருச்சி கிளம்பி காலை 7:10 மணிக்கு வியன்னா செல்லும் ரயிலில் கிளம்பினோம். 10:10 வியன்னாவில் இறங்கினோம்.


இறங்கின பத்தாவது நிமிஷம் ஒரு அதிர்ச்சியான விசயத்த கேள்வி பட்டோம்.

அது என்னவா இருக்கும் ?????????????


அடுத்த பதிவுல பாருங்க......... 

                                                                                             
                                                                                              நன்றிகளுடன் 
                                                 
                                                                                    மகேஷ் பிரபு விஜயராஜ்              
 

புதன், 12 நவம்பர், 2014

பயணங்கள் பலவிதம் - 1

 நவம்பர் மாதம் 8, 9 தேதிகளில் இத்தாலியிலிருந்து புடாபெஸ்ட் மற்றும் வியன்னா ஒரு பயணம் மேற்கொண்டோம் (மொத்தம் 4 அப்பாவிகள்), அதை பற்றிய ஒரு பயண பதிவு இது.

'ஆவ்' ன்னு கொட்டாவி விட்டுகிட்டே படிக்க ஆரம்பிங்க பாப்போம்......

சனிக்கிழமை காலை 8:45 மணிக்கு ரோம் சியாம்பினோ (Ciampino) விமான நிலையத்திலிருந்து ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் சென்று (2 மணி நேரம் பயணம், டிக்கட் விலை 56 Euro), அன்று முழுவதும் அங்கு சுற்றி பார்த்து விட்டு, மறுநாள் காலை 7:10 க்கு ரயில் (3 மணி நேரம் பயணம், டிக்கட் விலை 13 Euro), மூலம் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவை வேடிக்கை பார்த்துவிட்டு இரவு 7:30 மணிக்கு ரோமிற்கு ரயில் மூலம் அடுத்த நாள் காலை 9:22 மணிக்கு திரும்பி வருவதாக திட்டம் (14 மணி நேரம் பயணம், டிக்கட் விலை 39 Euro).    

ஏன் டிக்கட் விலையெல்லாம் சொல்றன்னு கேக்குறீங்கள, அதுக்கு பதில் பின்னாடி இருக்குங்க (சஸ்பென்ஸ் வச்சுடம்ல)......

நவம்பர் மாதம் 8ந் தேதி :

காலையில் 4 மணிக்கே அலரம் வச்சு கஷ்டப்பட்டு எந்திரிச்சி, கிளம்பி 7 மணிக்கு சியாம்பினோ (Ciampino) விமான நிலையம் போனோம். செக்கிங்  எல்லாம் முடிச்சிட்டு வரிசைல நின்னோம்......நின்னுகிட்டே இருந்தோம். போர்டிங் கேட் தொறக்கிற வழிய காணோம்.

அந்த விமான நிலையத்தில இருந்த கூட்டத்த, அங்க இருந்த மக்களையும் பார்த்த நம்ம கோயம்பேடு பஸ் ஸ்டாண்டே பரவாயில்லைன்னு தோணும்.

நீங்களே பாருங்க......








 எங்களுக்கு முன்னாடி ஏகப்பட்ட பேர் நின்னுகிட்டு இருந்தாங்க  (நாம ரேஷன் கடைல நிக்கிறதா விட, ரெம்ப பொறுப்பா நின்னாங்க). வரிசைல வரிசைல நின்னு கால் வலிக்க ஆரம்பிச்சிருச்சி, போங்கடா நீங்களும் உங்க வரிசையும் அப்படின்னு சொல்லிட்டு உக்கார இடம் தேடி அலைஞ்சோம். எங்கேயும் இடம் கிடைக்கல, பந்தில உக்கார மாதிரி தரைல நல்ல ஜம்ன்னு உக்காந்துட்டோம்.  

ஒருவழியா 9 மணிக்கு ஒரு அறிவிப்பு, புடாபெஸ்ட் போற விமானம் இன்னொரு விமான நிலையமான ஃபியுமிசினோ (Fumicino) ல இருந்து கிளம்பும், எல்லாம் போர்டிங் கேட் போங்கனாங்க.

 அங்க போனா ஒரு பஸ்ல ஏத்திவிட்டாங்க, அந்த பஸ் ஒரு U-டர்ன், அரைவல் கேட்ல இறக்கிவிட்டுச்சி. எல்லாரும் விமான நிலையத்த விட்டு வெளியே போங்க. இன்னொரு பஸ் மூலமா ஃபியுமிசினோ போலாம்ன்னு சொன்னாங்க. அடிச்சி பிடிச்சி அந்த பஸ்ல ஏறிட்டோம், அது என்ன மாயமோ என்னமோ, எனக்கு உக்கார எடம் இல்லை. டிரைவர், வா பங்காளி என் பக்கத்துல கிளினர் சீட்ல உக்காருன்னு சொன்னாரு.

ஃபியுமிசினோ விமான நிலையத்தில செக்கிங் முடிச்சிட்டு உள்ளே போய் உக்கார்ந்தோம். அப்போ டிங்னு ஒரு சத்தம், என்னான்னு பார்த்தா, என்னோட மொபைலுக்கு ஒரு மெசேஜ் வந்திருந்தது.

இந்த மாதிரி, இந்த மாதிரி, உங்க விமானம் தாமதமாகி போச்சு, மன்னிச்சிருங்க சாமி, விமானம் தோராயமா 12:30 கிளம்பும்ன்னு வந்திருந்தது.
அப்போ புடாபெஸ்ட் பீ.....பீ...... தானா, ஏர்போர்ட் தான் சுத்தி சுத்தி பாக்கணும் போல நினைச்சிகிட்டு போர்டிங் கேட் முன்னாடி வெறிக்க வெறிக்க பார்த்துட்டு உக்காந்து இருந்தோம்.

நம்ம ஊர்ல விமானம் தாமதமானால், காஞ்சிபோன சமோசா, சான்விட்ச், காபி, சூஸ் எல்லாம் குடுப்பாங்களே, இவங்க அதே மாதிரி குடுப்பாங்களா, போய் ஏர்லைன்ஸ் ஆளுங்கள்ட்ட கேட்டோம். அவங்க நம்மள விட விவரம், இந்தா பஸ் வந்துகிட்டே இருக்கு, நீங்க இப்போ விமானம் எறிரலாம்னு சொன்னாங்க.    

எங்களுக்கு 2 பஸ்ல மக்கள் ஏறி விமானத்துக்கு போய்டாங்க, நாங்கதான் கடைசி. அங்க போய் பார்த்த எல்லாம் விமான சுத்தி நின்னுகிட்டு இருக்கானுக. ஒரு கோஷ்டி விமானத்தோட விங்க்ஸ்க்கு கிழே குடும்பம் நடத்திகிட்டு இருக்குது.




என்ன விசயம்னா, 4 மணி நேரத்துக்கு மேல தாமதமான, பயணிகளுக்கு காச திருப்பிக்கொடுக்கனுமாம், அதனால எல்லாரையும் 3.45 மணி நேர தாமதத்திலே, விமானம் பக்கத்தில நிக்க வச்சிட்டாங்க.

அப்புறம் ஒரு வழியா உள்ள போய் ஒரு மணிக்கு கிளம்பி மத்தியானம், 3.15 கொண்டு போய் புடாபெஸ்ட் விமான நிலையத்தில இறக்கி விட்டாங்க. சத்தியமா சொல்றேங்க நம்ம மதுரை ஏர்போர்ட் சொர்க்கம், விமானத்தில இருந்து இறங்கி டெர்மினலுக்கு போற பாதைய நீங்களே பாருங்க.
      

அப்புறம் டெர்மினல் போய் சிட்டிக்குள்ளே போக 24 மணி நேரம் பாஸ் வாங்கினோம். ஒருத்தருக்கு பாஸ் இந்திய மதிப்பில் 420 ரூபாய், 5 பேர் கொண்ட குழுவுக்கு 1300 ரூபாய். கணக்குல நம்மள விட ரெம்ப விவரமா இருப்பாங்க போல, எங்க நாலு பேருக்கு 5 பேர் குழு பாஸ் வாங்கிட்டு, பஸ், அப்புறம் மெட்ரோன்னு மாறி சிட்டிக்குள்ள போனோம்.

நாங்க ஹோட்டல் போனப்ப மணி 5. 

அப்படியே ஊர சுத்தி பார்த்தோம், சும்மா சொல்லகூடாது, இரவு விளக்கு வெளிச்சதில ஊர் ரெம்பவே அழகா இருந்தது........


அந்த புகைப்பட தொகுப்ப அடுத்த பதிவுல பாருங்க......... 

                                                                                             
                                                                                                    நன்றிகளுடன் 
                                                 
                                                                                  மகேஷ் பிரபு விஜயராஜ்              

                                                                                                         

சனி, 8 நவம்பர், 2014

தலையின் மேல் விதி - 4

முன்னாடி என்ன நடந்திருக்கும், இத அழுத்தின தெரியும்


கந்தஹார் விமான நிலையம்

 

கந்தஹார் தாலிபான்கள் இந்த விவகாரத்தை தாங்கள் கையாண்டால், உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என கருதி, IC-814 விமானத்தை சுற்றி பாதுகாவலர்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். நாங்கள் மத்தியஸ்தம் செய்கிறோம், கடத்தல்காரர்கள் பயணிகளை தாக்க கூடாது என்பதற்காவே  பாதுகாவலர்களை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றார்கள்.


 இந்தியா அவர்களை நம்பவில்லை, இந்திய கமண்டோக்கள் விமானத்தை நெருங்க கூடாது என்பதற்காவே பாதுகாவலர்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என நினைத்தனர், அதனால் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை பேச்சுவார்த்தை நடத்துமாறு பணித்தனர். 

 

அன்று மதியம் பயணிகளின் உறவினர்கள், பிரதமர் வீட்டின் முன்பு கூடினார்கள். என்ன விலைகொடுத்தேனும் பயணிகளை மீட்க்கவேண்டும் என கோஷமிட்டார்கள். டிசம்பர் 30 வரை பிரதமர் வீட்டின் முன்பு இந்த காட்சி அரங்கேறியது.

 

கடத்தல்காரர்கள், இந்தியாவின் வெவ்வேறு சிறையில் உள்ள 36 தீவிரவாதிகளை விடுவிக்கவிடில், விமானத்தை வெடிக்க செய்து விடுவதாக மிரட்டினார்கள்.

 

வெளியுறவு துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், கடத்தப்பட்ட பயணிகளின் உறவினர்களிடம் அரசு பயணிகளை மீட்க்க எடுக்கும் முயற்சிகளை பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். உறவினர்கள் எதையும் கேட்கும் நிலையில் இல்லை.

 

"எங்களுக்கு எங்கள் உறவினர்கள் வேண்டும், நீங்கள் என்ன கொடுப்பீர்கள்  என்பதை பற்றி எங்களுக்கு அக்கறை இல்லை. நீங்கள் காஷ்மீர் கொடுக்கும் நிலைக்கு வந்தால் கூட நாங்கள் கவலை பட மாட்டோம், எங்களுக்கு எங்கள் உறவினர்கள் வேண்டும்" என்றார்கள்.    

 

ஜஸ்வந்த் சிங், "நாட்டின் பாதுகாப்பையும் சிந்திக்க வேண்டும், அரசாங்கத்தால் என்ன முடியுமோ அதை கண்டிப்பாக செய்யும்" என்றார்.

 

பயணிகளின் உறவினர்கள் கோபமடைந்து கோஷமிட்டார்கள்.

 

அதன் பிறகு ஒரு நாள் மாலை, ஜஸ்வந்த் சிங் பத்திரிக்கையாளர்களுடன் சந்திப்பு நடத்தினார், அங்கும் வந்து பயணிகளின் உறவினர்கள் கூச்சலிட்டார்கள், அதில் ஒருவர், இதற்க்கு முன்பு இந்திய அரசாங்கம், உள்துறை அமைச்சர் முப்தி முஹம்மது சயீத் மகள் கடத்தப்பட்ட போது தீவிரவாதிகளை விடுவித்தது போல, இப்பொழுது விடுவியுங்கள், நீங்கள் எதை கொடுத்தாலும் கவலை  இல்லை.காஷ்மீரை கூட கொடுங்கள், எங்களுக்கு எங்கள் உறவினர்கள் வேண்டும்" என்றார்.        

 

இன்னொரு நாள் மாலை, கார்கில் போரில் இறந்த விமானி அஜய் அகுஜாவின் மனைவி, பிரதமர் அலுவலகம் வந்தார். அவர் பயணிகளின் உறவினர்களை சந்தித்தார்.

 

"கடத்தல்காரர்களின் மிரட்டலுக்கு நாம் அடிபணிய கூடாது, இது தொடர் கதையாகிவிடும். நம் நாட்டிற்க்கு அவமானம், அந்த தீவிரவாதிகள் வெளியே வந்தால் நாட்டிற்கு ஆபத்து அதிகமாகி விடும், என்னையே எடுத்துகொள்ளுங்கள், என் கணவர் நாட்டுக்கு இறந்தார், இதற்க்கு நான் பெருமைபடுகிறேன்" என்றார்.

 

இதை கேட்ட பயணிகளின் உறவினர்களில் ஒருவர், "இவள் விதவை ஆகிவிட்டாள் என்பதற்காக, அடுத்தவர்களையும் விதவை ஆகா சொல்கிறாள், எங்களிடம் வந்து பேச யாரிவள்" என்றார்.

 

இதே போல் கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் தாய், தந்தை மற்றும் மனைவிகள் அவர்களிடம் பேசி பார்த்தார்கள். கர்னல் விரேந்திர தப்பார், கார்கில் போரில் உயிரிழந்த லெப். விஜயன்ட் தப்பாரின் தந்தை "நாட்டு மக்கள் கடத்தல்காரர்களுக்கு எதிராக ஒன்றுபடவேண்டும்", என்றார். 

 

பயணிகளின் உறவினர்கள், இதெயெல்லாம் கண்டுகொள்ளவில்லை. மீடியாவும், பெருவாரியான நாட்டுமக்களும் பினையகைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள், என்றனர். காங்கிரஸ் கட்சி, நாங்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம், அதே நேரத்தில் அரசாங்கம் அதன் தவறுகளை ஒத்துக்கொள்ள வேண்டும் என்றார்கள்.

 

டிசம்பர் 28 ஆம் தேதி, இந்திய அரசாங்கம், 3 பயங்கரமான தீவிரவாதிகளை விடுவிப்பதாக ஒத்துக்கொண்டது. அவர்கள் மௌலான மசுத் அசார், அஹ்மத் சர்கர், ஓமர் ஷேக்.  

 

டிசம்பர் 31 ஆம் தேதி, கடத்தப்பட்ட பயணிகளை மீட்க இரண்டு விமானம்  கந்தஹார் கிளம்பியது. இறுதி நேரத்தில் எதுவும் சிக்கல் வந்து விட கூடாது என ஜஸ்வந்த் சிங்ம் சென்றார், அன்று மாலை பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

 

அதற்க்கு அடுத்த நாள், கடத்தல்காரர்களிடம் சரணடைந்ததாக அரசாங்கத்தை விமரிசித்தார்கள். அரசாங்கம் மிக பெரிய தவறு செய்ததாக கூறினார்கள்.

 

நம் உறவினர்கள் அந்த விமானத்தில் இருந்தால் என்ன செய்திருப்போம், நாமும் அதேதான் செய்திருப்போம். குறிப்பாக நான் அப்படிதான் செய்திருப்பேன். கோழைத்தனத்தை ஒத்துக்கொள்ள தான் வேண்டும்... 

 

அரசாங்கத்தால் மட்டும் என்ன செய்து விட முடியும், நடந்த தவறுக்கு  அரசாங்கம் மட்டுமா பொறுப்பு, நாமும் தானே........


விடுவிக்கப்பட்ட  தீவிரவாதி.........

 

மௌலான மசுத் அசார், ஒரு இயக்கத்தை ஆரம்பித்தான் ஜெயிஸ்-இ-முஹம்மது, அந்த இயக்கம் தான் நாடாளுமன்றம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் சட்டசபை தாக்குதல்களை செய்தது.

 

ஓமர் ஷேக் 9/11 தாக்குதலுக்கு பண உதவி செய்தான்,  பின்னாட்களில்  பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டான்.

 

அஹ்மத் சர்கர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கிறான்..    

 

டிஸ்கி 1 : விறுவிறுப்பு ப்ரீமியம்.காமில், இதே தலைப்பில், ஒரு தொடர் வெளிவருகிறது. இதில் கூறப்பட்ட செய்திகள், அதில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல. நான் விறுவிறுப்பு ப்ரீமியம் சந்தாதாரரும் அல்ல. 
விக்கிப்பிடியவில் ஆரம்பித்து பலதரப்பட்ட வலைதளத்தில் இருந்து கிடைக்க பெற்றது.

 

 

                                                                                                    -  நன்றிகளுடன் 

                                                                                             மகேஷ் பிரபு விஜயராஜ் 


    

தலையின் மேல் விதி - 3

டெல்லியில் நடந்த விமான விபத்து பற்றி தேடிய பொழுது, மேலும் சில விமான விவகாரங்கள் கண்ணில் பட்டது. உங்களுடன் பகிர ஆசைபடுகிறேன் (வேற வழி இல்லை, நீங்க படிச்சி தான் ஆகனும்,  தலைல எழுதி இருக்கிறத மாத்த முடியுமா).

 

கந்தஹார் விமான கடத்தல் பற்றி அநேகருக்கு தெரியும், அதை பற்றி ஒரு சிறு அலசல்..

  

1999 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24 ஆம் நாள், நேரம் மாலை 04:25, நேபால் தலை நகர் காத்மாண்டு திரிபுவன் விமான நிலையத்திலிருந்து புது டெல்லி செல்லும்  ஏர்-இந்திய விமானம் IC-814, 178 பயனிகள் மற்றும் 15 விமான பணியாளர்களுடன் புறப்பட்டது.

 

ஹர்கத்-உல்-முஜாஹிதின் (பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கம்) இயக்கத்தை சேர்ந்த ஐந்து பேர் இந்திய பயனிகள் போர்வையில் விமானத்தில் ஏறினார்கள்.

 

விமானம் கிளம்பி 40 நிமிடங்கள் கழித்து, இந்திய வான்பரப்பின் மீது பறந்து கொண்டு இருந்த போது தீவிரவாதிகள் விமானத்தை கடத்தினார்கள். விமானத்தை பாகிஸ்தான் நோக்கி பறக்க சொன்னார்கள். லாகூரில் தரை இறங்கி, அங்கிருந்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தலாம் என திட்டம் தீட்டி இருந்தார்கள்.

 

துரதிருஷ்டவசமாக விமானம் தரை இறங்க லாகூர் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்தார்கள். இந்த கட்டத்தில் விமானத்தில் குறைந்து அளவு எரிபொருள் இருந்தது. (பொதுவாக விமானத்தில் பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டே எரிபொருள் நிரப்பப்படும், தரைறங்கும் பொழுது அதிகமான எரிபொருள் இருந்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.)

 

விமானம் தரை இறக்கி ஆக வேண்டிய நிலைமையையில் உள்ளதால், அமிர்தசரஸில் விமானத்தை இறக்கலாம் என விமானி கூறினார்.

 

இந்திய மண்ணில் கடத்திய விமானத்தை தரை இறக்குவது, சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது மாதிரி தான், ஆனால் தீவிரவாதிகளுக்கு வேறுவழி இல்லை.

 

எரிபொருள் நிரப்பிய பிறகு உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்ற நிபந்தனையோடு ஒத்துக்கொண்டார்கள்.

 

மாலை 07:00 மணியளவில் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது.

 

NSG கமாண்டோக்கள் டெல்லியிலிருந்து வரும் வரை எரிபொருள் நிரப்புவதை தாமதபடுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இப்படியாக முக்கால் மணி நேரம் ஓடிவிட்டது.

 

தாமதமாவதை உணர்ந்த தீவிரவாதிகள் விமானத்தை லாகூரூக்கு செலுத்துமாறு உத்தரவிட்டார்கள். விமானி, விமானத்தை கிளப்பாமல் எரிபொருள் நிலைமையை விளக்கிக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் பயணிகளை தாக்க தொடங்கினர்.

 

இந்த தாக்குதலில் ரூபின் கட்யல் (28) என்ற வாலிபர் உயிரிழந்தார் . இவர் தனது புது மனைவியுடன் நேபாளத்தில் தேனிலவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் என்பதுதான் பரிதாபம். மேலும் 17 பயணிகள் காயமடைந்தனர்.

 

விமானி, வேறு வழியில்லாமல் மிக குறைந்த எரிபொருளுடன் விமானத்தை  மறுபடியும் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் கொண்டு சென்றார். இந்நிலையில் ஏதாவது பெரிய வாகனத்தை ரன்வேயின் குறுக்கே நிறுத்தி வைத்தோ அல்லது விமானத்தின் டயரை சுட்டோ, விமானத்தை தடுக்கலாம் என நினைத்தது நிறைவேறாமல் போய்விட்டது.

 

 அமிர்தசரஸிலிருந்து லாகூர் வெறும் 55 கி. மீ. தூரம் மட்டுமே....

 

மறுபடியும்  லாகூர் விமான நிலைய அதிகாரிகள், விமானத்தை தரை இறங்க அனுமதிக்க வில்லை. இதற்க்கு முத்தாய்ப்பாக தங்களது வான்பாதையையும் மூடி வைத்தார்கள்.

 

(இது தான் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டில ஆற்றதோ)

 

வான்பாதையை மூடுவது என்பது, விமான நிலையத்தில் அனைத்து தொலை தொடர்பு சாதனங்கள், விளக்குகள் மற்றும் ஓடு பாதையில் உள்ள விளக்குகள் ஆகியவற்றை அனைத்து வைப்பதாகும்.

 

எரிபொருள் தீரும் நிலையில், விமானிக்கு வேறு வழி இல்லாததால் லாகூர் விமான நிலைய அதிகாரிகள் மறுப்பையும் மீறி தரை இறங்க முடிவு செய்தார்.

 

நன்கு வெளிச்சமாக இருந்த சாலையை ஓடுபாதை என தவறாக நினைத்து விமானத்தை கிழே இறக்கினார் . அவருக்கு ஓடு பாதையில் உள்ள விளக்குகள் அனைத்து வைத்த விபரம் தெரியாது. சாலையை நெருங்கும் சமயம், தன் தவறை உணர்ந்து, விமானத்தை மேல் எழுப்பினார்.

 

இப்பொழுது விமானம் தரை இறக்கி ஆகா வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, இல்லை என்றால் எரிபொருள் இல்லாமல் கிழே விழுந்து வெடித்து விடும். வேறு வழி இல்லாததால் லாகூர் விமான நிலைய அதிகாரிகள், இரண்டு நிபந்தனைகளோடு விமானத்தை தரை இறங்க அனுமதித்தனர், அவை,,,

 

விமானம் எரிபொருள் நிரப்பியதும், லாகூரில் இருந்து கிளம்பி விட வேண்டும்,

 

விமானத்தை விட்டு கிழே யாரும் இறங்ககூடாது.

 

எரிபொருள் நிரப்பியதும் விமானம் லாகூரில் இருந்து கிளம்பி முதலில்   காபுல் (ஆப்கானிஸ்தான்) சென்றது, அங்கே தரை இறங்க மறுக்கப்பட்டது, பின்பு மஸ்கட் (ஓமான்), அங்கேயும் மறுக்கப்பட்டது. பின்பு துபாய் சென்றது.

துபாயும் கடத்தல் விமானம் தரை இறங்க அனுமதிக்க விரும்பவில்லை. தங்களது ஓடு பாதையில் பேருந்துகளை நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்போதைய இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வேண்டுகோளின்படி "Al Minhad" விமான தளத்தில் தரை இறங்க அனுமதித்தனர் (இது துபாயில் இருந்து 40 மையில் தொலைவில் உள்ளது).

 

மனிதாபிமான அடிப்படையில் விமானத்தை தரை இறங்க அனுமதித்யுள்ளோம், அவர்கள் இங்கே அதிக நேரம் தங்குவதை நாங்கள் விரும்பவில்லை என்றார்கள்.


 
 

 


கடத்தல்காரர்கள் விமான தள அதிகாரிகளிடம் உணவு மற்றும் எரிபொருள் நிரப்புமாறு கேட்டார்கள். காயம் பட்டவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவித்தால் ஏற்பாடு செய்வதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினார்கள்.

இதற்க்கு கடத்தல்காரர்கள் ஒத்துக்கொண்டார்கள்.

                        

ரூபின் கட்யல் இறந்த உடல் மற்றும் 27 பயணிகளை விடுவித்தனர்.

 

இதே சமயத்தில் அமிர்தசரஸ் விமான நிலையத்திலிருந்து IL-76 எனும் விமானத்தில் NSG கமாண்டோக்கள், பயணிகளை மீட்க்க துபாய் நோக்கி சென்றனர். துபாய் விமான நிலையத்தில் ரன்வே அடைத்து வைக்கப்பட்டதால் திரும்பி வந்துவிட்டனர். (அந்த ரன்வே மட்டும் அப்பொழுது திறந்திருந்தால் விதி மாறி இருக்கும், இந்தியாவும் தலைகுனிவை சந்தித்திருக்க வேண்டாம்)..

 

அடுத்த நாள் காலை, டிசம்பர் 25 விமானம் கந்தஹார் சென்றது....................

         

பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால், இதன் முடிவு அடுத்த பதிவில் வரும்.............

டிஸ்கி 1 : விறுவிறுப்பு ப்ரீமியம்.காமில், இதே தலைப்பில், ஒரு தொடர் வெளிவருகிறது. இதில் கூறப்பட்ட செய்திகள், அதில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல. நான் விறுவிறுப்பு ப்ரீமியம் சந்தாதாரரும் அல்ல. 

விக்கிப்பிடியவில் ஆரம்பித்து பலதரப்பட்ட வலைதளத்தில் இருந்து கிடைக்க பெற்றது.



 
                                                                                                    -  நன்றிகளுடன் 
                                                                                      மகேஷ் பிரபு விஜயராஜ் 


வியாழன், 6 நவம்பர், 2014

சரோஜா அக்கா - பெருமாள் மாமா - 2

இதுக்கு முன்னாடி என்ன நடந்தது............. இங்கே பாருங்க..........

 
 

நம்ம பெருமாள் பத்தி நெறைய சொல்லலாம், சாம்பிளுக்கு ஒன்னு, ரெண்டு பாப்போம்.       

பிளாஷ் பேக் : 1

 

நம்ம பெருமாள் ஸ்கூல் முடிச்சிட்டு வெளியூர்ல காலேஜ் ஜாயின் பண்ணி இருந்தான். சீனியர் கூப்பிட்டு பெருமாளை கலாய்த்து கொண்டு இருந்தனர்.

 

சீனியர், "எந்த ஊர் டா நீ ?"

 

பெருமாள், "அண்ணா அருப்புக்கோட்டைனா".

 

 சீனியரும் அருப்புக்கோட்டைதான், உடனே தம்பி மேல பாசம் பொங்கி வந்தது.

 

ஊர்ல இருந்து த்ரூ பஸ்லயாட (Direct Bus) வந்த ?

 

இல்லை அண்ணா, பெயிண்ட் அடிச்ச பஸ்ல தான் அண்ணா வந்தேன்.

 

என்ன நக்கலாடா ?, ஒரே ஊர்ங்கிறதால உன்னை சும்மா விடுறேன், ஓடி போய்டு.

 

அன்னிக்கு பெருமாள் எஸ்கேப்.

 

 

பிளாஷ் பேக் : 2

  

ஒரு மாசம் கழித்து அதே சீனியர்,

 

என்னடா தம்பி ரெண்டு மூணு நாளா உன்னை ஆள காணோம், ஊருக்கு போயிருந்தியா ?

 

ஆமா அண்ணா.

 

தனியாவா ஊருக்கு போட்டு வந்த ?

 

இல்லைனா, பஸ்ல டிரைவர், கண்டக்டர் அப்புறம் நெறைய பாசஞ்சர் வந்தாங்க.

 

சீனியர் வெறி ஆகி, ஒரு நாள் முழுவதும் ஹாஸ்டல் ரும் ஸ்லாபில் உக்கார வைத்து விட்டார்.

 

 

பிளாஷ் பேக் : 3

 

எல்லா காலேஜ் மாதிரி நம்ம பெருமாள் காலேஜ்லையும் ஒரு ஸ்ட்ரிக்ட் வாத்தியார். ஒரு நாள் கேள்வி கேட்டு பசங்கள லேப்ட் ரைட் வாங்கிகிட்டு  இருந்தார். நம்ம பெருமாள் டர்ன் வந்தது.

 

"பெருமாள், கெட்-அப்", வாத்தியார்.

 

பெருமாள் மிலிடரி கெட்-அப்பில் வணக்கம் வைக்க,

 

"நான் என்ன மிலிடரிக்கா மென் ஆள் எடுக்கிறேன், ஓகே நவ் அன்சர் மை கொஸ்டீன் ", வாத்தியார்.

 

"எஸ் சார்", பெருமாள்.

 

"வாட் இஸ் தி ரா மேடிரியல் பார் பேப்பர்", வாத்தியார்.

 

"சார்", பெருமாள்.

 

"எதிலிருந்து பேப்பர் தயாரிக்கப்படுகிறது", வாத்தியார்.  

 

"            ", பெருமாள் 

 

"காமான் மென்", வாத்தியார்.  

 

"தெரியல                                  சார்", பெருமாள்.

 

"இடியட், உன் முன்னாடி ஒரு பேப்பர் இருக்குல்ல, அத பார்த்தாவது சொல்லு மென்", வாத்தியார்.  

 

"அது வெள்ளை பேப்பர் சார், ஒண்ணுமே எழுதலை, நீங்களே பாருங்க, அத பார்த்து எப்படி சார் சொல்றது", பெருமாள்.

 

"ஸ்டுபிட், நான்சென்ஸ், கெட் அவுட் பரம் மை கிளாஸ், ஹியர் ஆப்டர் யு ஷ்ட் நாட் என்ட்டர் மை கிளாஸ்", வாத்தியார்.    

 
 
நன்றி : கூகிலாண்டவர் 
 

அப்புறம் என்ன, அந்த செமெஸ்டர் புல்லா, பெருமாள் அவுட் ஸ்டான்டிங் ஸ்டுடென்ட் தான்....  

                                                                                                              - நன்றிகளுடன் 

                                                                                                      மகேஷ் பிரபு விஜயராஜ் 


  

புதன், 5 நவம்பர், 2014

Happy New Year - Nanayam

சமீபத்தில் வெளியான Happy New Year படம் பார்த்தேன். அந்த படம் 2010ல் வெளி வந்த நாணயம் படத்தை நியாபகம் படுத்தியது.

 

Happy New Year:

 
 

 

ஷாருக்கான் அப்பா ஒரு பாதுகாப்பு பெட்டகங்கள் தாயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளார். வில்லன் அவரிடம் யாராலும் திறக்க முடியாத ஒரு லாக்கரை செய்ய சொல்கிறான். ஷாருக்கான் அப்பா அப்படி ஒரு லாக்கர் செய்து அதற்க்கு ஷாலிமார் என பெயர் வைக்கிறார். அதில் 100 கோடி ரூபாய் வைரங்களை ஷாருக்கானின் அப்பா பொறுப்பில் வைக்கிறான். அது ஷாருக்கான் அப்பா கைரேகை வைத்தால் மட்டுமே திறக்கும், அவருக்கு போதை மருந்து கொடுத்து, அவர் கைரேகையை பயன்படுத்தி வில்லனே அந்த வைரங்களை கடத்துகிறான். ஷாருக்கான் அப்பாவிற்கு 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைகிறது. அவர் மனமுடைந்து சிறையில் தற்கொலை செய்து கொள்கிறார். வில்லன் அந்த லாக்கர் டிசைன் வைத்து பெரும் பணக்காரன் ஆகிறான்.

 

8 வருடம் கழித்து, அகில உலக நடன போட்டி நடக்கிறது. அதில் 300 கோடி ரூபாய் வைரங்களை காட்சிக்கு வைக்கிறார்கள். பாதுகாப்பிற்காக ஷாலிமாரில் வைக்கிறார்கள். ஷாருக்கான், தன் அப்பாவின் நண்பர்களின் உதவியோடு அந்த வைரங்களை கடத்தி வில்லனை சிறைக்கு அனுப்பலாம் என திட்டம் போடுகிறார். அந்த கடத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக அகில உலக நடன போட்டியிலும் பங்கு பெறுகின்றனர்.

 

அவர்களால் வைரங்களை கடத்த முடிந்ததா, நடன போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தார்களா என்பது தான் மீதி கதை. (நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனுமா)...

 

நாணயம் :

 
 
 

பிரசன்னா ஒரு வங்கியில் சேருகின்றார், அந்த வங்கியின் உரிமையாளர் SPB, அவர் பிரசன்னாவிடம் பாதுகாப்பான லாக்கர் சிஸ்டம் செய்ய சொல்கிறார். பிரசன்னாவிற்கு ஒரு கேர்ள் பிரண்ட் அறிமுகமாகிறார். வில்லன் (சிபி), அந்த கேர்ள் பிரண்ட்டை கடத்தி வைத்துக்கொண்டு பிரசன்னாவிடம் அந்த லாக்கரை உடைத்து தர சொல்கிறார். லாக்கரை உடைத்து திருடும் வேளையில் சிபியை வீழ்த்தி உண்மையை கண்டு பிடிக்கிறார்.

 

அது என்னவென்றால் SPBயின் தகாத உறவு பற்றி அடங்கிய ஒரு டயரி அந்த லாக்கரில் உள்ளது. பணத்தை திருடுவது போல் அந்த டயரியை திருட வேண்டும்.

 

இறுதயில் SPB தற்கொலை செய்து கொள்கிறார்..... 

 

இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் கதை தளம் ஒன்றுதான், ஆனால் திரைகதையில் தான் ஏகப்பட்ட வித்தியாசம்.

 

லாக்கரை உடைப்பதின் நோக்கம்..., 

 

தந்தையின் மரணத்திற்காக ஷாருக்கான்  பழிவாங்குவது....  

 

கள்ளக்காதல் வெளியே தெரிய கூடாது என்பதற்காக.... 

 

கிளைமாக்ஸ்...,

 

திருடிய பின் மாட்டிக்கொள்ள வாய்ப்பிருந்த பொழுதும் இந்தியாவின் மானம் போக கூடாது என தப்பி போகாமல் நடனம் ஆடி முதல் பரிசு வாங்குகிறார்கள் (இது டூ மச் என்றாலும் ரசிக்க வைத்தது).  

 

சஸ்பென்ஸ் என்ற பெயரில் SPB காட்டி சப்பையாக முடித்திருந்தார்கள்.  

 

லாக்கரை உடைக்கும் முயற்சி ஏறக்குறைய ஒன்று என்றாலும், லாக்கரில் இருந்து வெளியே வரும் முறை Happy New Yearயில் சற்று வித்தியாசமாக யோசித்திருந்தார்கள். மொத்தத்தில் Happy New Year நாணயத்தை விட பல மடங்கு சிறப்பாக இருந்தது.

 
டிஸ்கி : முத முதல்ல சினிமா விமர்சனம் எழுதி இருக்கேன்,  இத விமர்ச்சி ஏதாவது சொல்லுங்க..........