சனி, 8 நவம்பர், 2014

தலையின் மேல் விதி - 3

டெல்லியில் நடந்த விமான விபத்து பற்றி தேடிய பொழுது, மேலும் சில விமான விவகாரங்கள் கண்ணில் பட்டது. உங்களுடன் பகிர ஆசைபடுகிறேன் (வேற வழி இல்லை, நீங்க படிச்சி தான் ஆகனும்,  தலைல எழுதி இருக்கிறத மாத்த முடியுமா).

 

கந்தஹார் விமான கடத்தல் பற்றி அநேகருக்கு தெரியும், அதை பற்றி ஒரு சிறு அலசல்..

  

1999 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24 ஆம் நாள், நேரம் மாலை 04:25, நேபால் தலை நகர் காத்மாண்டு திரிபுவன் விமான நிலையத்திலிருந்து புது டெல்லி செல்லும்  ஏர்-இந்திய விமானம் IC-814, 178 பயனிகள் மற்றும் 15 விமான பணியாளர்களுடன் புறப்பட்டது.

 

ஹர்கத்-உல்-முஜாஹிதின் (பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத இயக்கம்) இயக்கத்தை சேர்ந்த ஐந்து பேர் இந்திய பயனிகள் போர்வையில் விமானத்தில் ஏறினார்கள்.

 

விமானம் கிளம்பி 40 நிமிடங்கள் கழித்து, இந்திய வான்பரப்பின் மீது பறந்து கொண்டு இருந்த போது தீவிரவாதிகள் விமானத்தை கடத்தினார்கள். விமானத்தை பாகிஸ்தான் நோக்கி பறக்க சொன்னார்கள். லாகூரில் தரை இறங்கி, அங்கிருந்து இந்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தலாம் என திட்டம் தீட்டி இருந்தார்கள்.

 

துரதிருஷ்டவசமாக விமானம் தரை இறங்க லாகூர் விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்தார்கள். இந்த கட்டத்தில் விமானத்தில் குறைந்து அளவு எரிபொருள் இருந்தது. (பொதுவாக விமானத்தில் பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டே எரிபொருள் நிரப்பப்படும், தரைறங்கும் பொழுது அதிகமான எரிபொருள் இருந்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.)

 

விமானம் தரை இறக்கி ஆக வேண்டிய நிலைமையையில் உள்ளதால், அமிர்தசரஸில் விமானத்தை இறக்கலாம் என விமானி கூறினார்.

 

இந்திய மண்ணில் கடத்திய விமானத்தை தரை இறக்குவது, சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது மாதிரி தான், ஆனால் தீவிரவாதிகளுக்கு வேறுவழி இல்லை.

 

எரிபொருள் நிரப்பிய பிறகு உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்ற நிபந்தனையோடு ஒத்துக்கொண்டார்கள்.

 

மாலை 07:00 மணியளவில் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது.

 

NSG கமாண்டோக்கள் டெல்லியிலிருந்து வரும் வரை எரிபொருள் நிரப்புவதை தாமதபடுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டது. இப்படியாக முக்கால் மணி நேரம் ஓடிவிட்டது.

 

தாமதமாவதை உணர்ந்த தீவிரவாதிகள் விமானத்தை லாகூரூக்கு செலுத்துமாறு உத்தரவிட்டார்கள். விமானி, விமானத்தை கிளப்பாமல் எரிபொருள் நிலைமையை விளக்கிக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தீவிரவாதிகள் பயணிகளை தாக்க தொடங்கினர்.

 

இந்த தாக்குதலில் ரூபின் கட்யல் (28) என்ற வாலிபர் உயிரிழந்தார் . இவர் தனது புது மனைவியுடன் நேபாளத்தில் தேனிலவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் என்பதுதான் பரிதாபம். மேலும் 17 பயணிகள் காயமடைந்தனர்.

 

விமானி, வேறு வழியில்லாமல் மிக குறைந்த எரிபொருளுடன் விமானத்தை  மறுபடியும் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் கொண்டு சென்றார். இந்நிலையில் ஏதாவது பெரிய வாகனத்தை ரன்வேயின் குறுக்கே நிறுத்தி வைத்தோ அல்லது விமானத்தின் டயரை சுட்டோ, விமானத்தை தடுக்கலாம் என நினைத்தது நிறைவேறாமல் போய்விட்டது.

 

 அமிர்தசரஸிலிருந்து லாகூர் வெறும் 55 கி. மீ. தூரம் மட்டுமே....

 

மறுபடியும்  லாகூர் விமான நிலைய அதிகாரிகள், விமானத்தை தரை இறங்க அனுமதிக்க வில்லை. இதற்க்கு முத்தாய்ப்பாக தங்களது வான்பாதையையும் மூடி வைத்தார்கள்.

 

(இது தான் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டில ஆற்றதோ)

 

வான்பாதையை மூடுவது என்பது, விமான நிலையத்தில் அனைத்து தொலை தொடர்பு சாதனங்கள், விளக்குகள் மற்றும் ஓடு பாதையில் உள்ள விளக்குகள் ஆகியவற்றை அனைத்து வைப்பதாகும்.

 

எரிபொருள் தீரும் நிலையில், விமானிக்கு வேறு வழி இல்லாததால் லாகூர் விமான நிலைய அதிகாரிகள் மறுப்பையும் மீறி தரை இறங்க முடிவு செய்தார்.

 

நன்கு வெளிச்சமாக இருந்த சாலையை ஓடுபாதை என தவறாக நினைத்து விமானத்தை கிழே இறக்கினார் . அவருக்கு ஓடு பாதையில் உள்ள விளக்குகள் அனைத்து வைத்த விபரம் தெரியாது. சாலையை நெருங்கும் சமயம், தன் தவறை உணர்ந்து, விமானத்தை மேல் எழுப்பினார்.

 

இப்பொழுது விமானம் தரை இறக்கி ஆகா வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, இல்லை என்றால் எரிபொருள் இல்லாமல் கிழே விழுந்து வெடித்து விடும். வேறு வழி இல்லாததால் லாகூர் விமான நிலைய அதிகாரிகள், இரண்டு நிபந்தனைகளோடு விமானத்தை தரை இறங்க அனுமதித்தனர், அவை,,,

 

விமானம் எரிபொருள் நிரப்பியதும், லாகூரில் இருந்து கிளம்பி விட வேண்டும்,

 

விமானத்தை விட்டு கிழே யாரும் இறங்ககூடாது.

 

எரிபொருள் நிரப்பியதும் விமானம் லாகூரில் இருந்து கிளம்பி முதலில்   காபுல் (ஆப்கானிஸ்தான்) சென்றது, அங்கே தரை இறங்க மறுக்கப்பட்டது, பின்பு மஸ்கட் (ஓமான்), அங்கேயும் மறுக்கப்பட்டது. பின்பு துபாய் சென்றது.

துபாயும் கடத்தல் விமானம் தரை இறங்க அனுமதிக்க விரும்பவில்லை. தங்களது ஓடு பாதையில் பேருந்துகளை நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்போதைய இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வேண்டுகோளின்படி "Al Minhad" விமான தளத்தில் தரை இறங்க அனுமதித்தனர் (இது துபாயில் இருந்து 40 மையில் தொலைவில் உள்ளது).

 

மனிதாபிமான அடிப்படையில் விமானத்தை தரை இறங்க அனுமதித்யுள்ளோம், அவர்கள் இங்கே அதிக நேரம் தங்குவதை நாங்கள் விரும்பவில்லை என்றார்கள்.


 
 

 


கடத்தல்காரர்கள் விமான தள அதிகாரிகளிடம் உணவு மற்றும் எரிபொருள் நிரப்புமாறு கேட்டார்கள். காயம் பட்டவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவித்தால் ஏற்பாடு செய்வதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினார்கள்.

இதற்க்கு கடத்தல்காரர்கள் ஒத்துக்கொண்டார்கள்.

                        

ரூபின் கட்யல் இறந்த உடல் மற்றும் 27 பயணிகளை விடுவித்தனர்.

 

இதே சமயத்தில் அமிர்தசரஸ் விமான நிலையத்திலிருந்து IL-76 எனும் விமானத்தில் NSG கமாண்டோக்கள், பயணிகளை மீட்க்க துபாய் நோக்கி சென்றனர். துபாய் விமான நிலையத்தில் ரன்வே அடைத்து வைக்கப்பட்டதால் திரும்பி வந்துவிட்டனர். (அந்த ரன்வே மட்டும் அப்பொழுது திறந்திருந்தால் விதி மாறி இருக்கும், இந்தியாவும் தலைகுனிவை சந்தித்திருக்க வேண்டாம்)..

 

அடுத்த நாள் காலை, டிசம்பர் 25 விமானம் கந்தஹார் சென்றது....................

         

பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால், இதன் முடிவு அடுத்த பதிவில் வரும்.............

டிஸ்கி 1 : விறுவிறுப்பு ப்ரீமியம்.காமில், இதே தலைப்பில், ஒரு தொடர் வெளிவருகிறது. இதில் கூறப்பட்ட செய்திகள், அதில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல. நான் விறுவிறுப்பு ப்ரீமியம் சந்தாதாரரும் அல்ல. 

விக்கிப்பிடியவில் ஆரம்பித்து பலதரப்பட்ட வலைதளத்தில் இருந்து கிடைக்க பெற்றது.



 
                                                                                                    -  நன்றிகளுடன் 
                                                                                      மகேஷ் பிரபு விஜயராஜ் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக