புதன், 11 ஜூன், 2014

தலையின் மேல் விதி - 1

MH-370, மலேசியன் விமானம் மனிதர்களின் கண்களில் இருந்து காணாமல் போய் மூன்று மாதத்திற்கு மேலாகியும் இன்னும் விடை தெரியாமல் இருக்கிறது.


தொழில்நுட்பங்களில் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்தாலும், வரலாறு நமக்கு சொல்வது, தவறுகளில் இருந்துதான் பாடங்களை நாம் கற்றுக்கொள்கிறோம், அதற்கு விலையாக, விலைமதிக்க முடியாத மனித உயிர்கள் பலி ஆகின்றது.


நாம் இன்று அனுபவிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், யாரோ ஒரு சக மனிதனின் அனுபவித்த வலியின் பலன் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. இதற்கு உதாரணமாக ஜர்க்கி-தத்ரி (Charkhi-Dadri) விமான விபத்தை எடுத்துக்கு கொள்ளலாம்.


வலைதளத்தில் மேய்ந்த பொழுது இந்த விபத்தை பற்றி படிக்க நேர்ந்தது, அது உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்களுக்கு இதே எண்ணம் ஏற்பட்டால் பின்னுட்டத்தில் சொல்லுங்கள்.


1996 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 12ந் தேதி மாலை 6:40 மணிக்கு டெல்லிக்கு அருகில் ஜர்க்கி-தத்ரி (Charkhi-Dadri), ஹரியானா மாநிலத்தில், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் போயிங் 747-168B மற்றும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் llyushin II-76TD (தமிழாக்கம் கண்ணை கட்டியதால் ஆங்கிலத்தில் விட்டு விட்டேன்) இரண்டும் ஆகாயத்தில் மோதி விபத்துக்குள்ளனது.    
      
சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம், புது டெல்லியில் இருந்து டெஹ்ரானுக்கு (சவுதி அரேபியா) 289 பயணிகள் + 23 விமான பணியாளர்களுடன் மாலை 6:32 மணிக்கு கிளம்பியது.





அதே நேரத்தில் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் Shymkentயில் (கஜகஸ்தான்) இருந்து புது டெல்லியிலக்கு  27 பயணிகள் + 10 விமான பணியாளர்களுடன் வந்து கொண்டிருந்தது.

      

கன்ட்ரோல் டவரின் அதிகாரி, கஜகஸ்தான் விமானத்தை, புது டெல்லி விமான நிலையம் அடைய சுமார் 117 கி.மீ. தூரம் இருக்கும் பொழுது பறத்தலை 15000 அடிக்கு குறைத்து அந்த உயரத்திலே பறக்க சொன்னார், ஏனென்றால் அதே காற்றுபாதையில் (Airway) சவுதி அரேபியன் விமானம் 14000 அடி உயரத்தில் கஜகஸ்தான் விமானத்திற்கு எதிர் திசையில் பறந்து வந்து கொண்டு இருந்தது. இரு விமானங்களும் ஒன்றை ஒன்று கடக்கும் பொழுது செங்குத்தாக 1000 அடி உயர வித்தியாசம் இருக்கும் என்பது கணிப்பு.

எட்டு நிமிடங்கள் பிறகு,

ராடார் அதிகாரிக்கும், கஜகஸ்தான் விமான ரேடியோ ஆப்பரேட்டருக்கும் நடந்த உரையாடல்...

"ராஜர், விமானம் 15000 அடி உயரத்திற்கு வந்து விட்டது", கஜகஸ்தான் விமான ரேடியோ ஆப்பரேட்டர்.

"ராஜர், விமான உயரத்தை 15000 அடி உயர்த்தில் பறத்தலை மேற்கொள்ளுங்கள், நேர் எதிரில், 14000 அடி உயரத்தில் சவுதி போயிங் 14 மையில் தூரத்தில் வந்து கொண்டு இருக்கிறது", டவர் அதிகாரி.

அனால் அப்பொழுது கஜகஸ்தான் விமானம் 14500 அடியில் இருந்தது, அது மேலும் மேலும் கிழே இறங்கி கொண்டு இருந்தது.    

"ராஜர், எவ்வளவு தூரம்", ரேடியோ ஆப்பரேட்டர்.

"ராஜர், 14 மையில்", டவர் அதிகாரி.

விமானத்தில் இருந்து பதில் ஏதும் வரவில்லை.

"ராஜர், 13 மையில், உயரம் 14000 அடி", டவர் அதிகாரி.  

"ராஜர்", ரேடியோ ஆப்பரேட்டர்.

மோதலுக்கு 38 நொடிகளுக்கு முன்பு,

"ராஜர், 8 மையில் தூரத்தில் போயிங் விமானம் உள்ளது", டவர் அதிகாரி.  

மோதலுக்கு 25 நொடிகளுக்கு முன்பு ரேடியோ ஆப்பரேட்டர், உயரம் காட்டும் கருவியை பார்த்தார் (அவருக்கென்று தனியாக கருவிகள் கிடையாது, அவரின் பணி ரேடியோ தொடர்பு மட்டுமே, தேவை என்றால் விமானியின் கருவியை தான் பார்த்துக்கொள்ளலாம்).

உயரத்தை 15000 அடிக்கு உயர்த்துங்கள் என விமானியிடம் கூறினார், விமானி உயரத்தை கூட்டும் லிவரை உபயோகித்தார். விமானம் மேல் எழும்பத்தொடங்கியது.  

இந்த நேரத்தில் கஜகஸ்தான் விமானம், சவுதி விமானத்தை விட கொஞ்சம் தாழ்வாக எதிர் திசையில் பறந்து வந்து கொண்டு இருந்தது.     




மேல் எழும்பிய கஜகஸ்தான் விமானத்தின் வால் பகுதி, போயிங்ன் இடது புற இறக்கையை வெட்டுவது போல் போய் இடித்தது, மற்றும் Horizontal Stabilizer (கிடைமட்ட நிலைபடுத்தி - தமிழ் மொழிபெயர்ப்பு கூகிள் உதவியுடன்) பகுதியையும் இடித்தது.




போயிங் இடது புற இறக்கையில் தீ பிடித்து எரிந்தது, நிலை குலைந்து சுழன்றபடியே, தரையை 1134 கி.மீ. வேகத்தில் நோக்கி சென்றது. இந்த வேகத்தில் தரையை நோக்கி சென்றதால், காற்றின் அழுத்தத்தால் விமானம் தரையில் விழும் முன்பே துண்டு துண்டாக உடைந்தது. விமானத்தில் உள்ள அனைவரும் கொல்லப்பட்டனர்.



கஜகஸ்தான் விமானம் பெரிதாக நிலை குலையவில்லை என்றாலும் கட்டுப்பாடு இழந்து வேகமாக தரையில் மோதி வெடித்தது. இந்த விமானத்தில் இருந்து நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டனர், சிகிச்சை பலனின்றி அவர்களும் இறந்தார்கள்.

கஜகஸ்தான் விமானம் அதே உயரத்தில் பறந்திருந்தால் கூட, சவுதி விமானத்திற்கு அடியில் பறந்திருக்கும், இந்த விபத்தும் தவிர்க்கபட்டிருக்கும். 

கஜகஸ்தான் விமானம், சவுதி விமானத்தை இடிப்பதற்காகவே உயரந்தது போல் ஆகி விட்டது. 

சவுதி விமானம் தாணி  (Dhani Village, Bhiwani District) என்னும் இடத்தில் விழுந்தது. இது ஜர்க்கி-தத்ரியிலிருந்து 56 கி.மீ. தூரத்தில் உள்ளது.

கஜகஸ்தான் விமானம், பிரோகர் (Birohar Village, Rohtak District) என்னும் இடத்தில் விழுந்து. இது ஜர்க்கி-தத்ரியிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது.     

இரு விமானங்களும் 70 கி.மீ. இடைவெளி தூரத்தில் தரையில் விழுந்துள்ளது. 


பதிவின் நீளம் அதிகமாகிவிட்டதால், இதன் முடிவு அடுத்த பதிவில் வரும்.............



டிஸ்கி - 1 : இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் 
விக்கிப்பிடியவில் ஆரம்பித்து பலதரப்பட்ட வலைதளத்தில் இருந்து கிடைக்க பெற்றது..  

டிஸ்கி - 2 : விமானத்தை பற்றி ஏதும் தெரியாமல் இருந்த எனக்கு ஆர்வம் உண்டாக்கியது விறுவிறுப்பு.காமில் திரு. ரிஷி அவர்கள் எழுதும் விமான சம்பந்தப்பட்ட கட்டுரைகள் தான்.   

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக