வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

டெல்லி - இதுவும் நம்ம மண்ணுதான் - 3

 மன்னன் பிரிதிவ்ராஜின் தோல்விக்கு பின்னர், முகம்மது கோரி, குத்புதின் அய்பக் எனும் அடிமை வீரனை டெல்லியின் ஆளுனராக நியமித்தார். 

கோரியின் மறைவிற்கு பின்னர், 1206 ஆம் ஆண்டு குத்புதின் டெல்லியின் சுல்தானாக பதவியேற்றர். இவரே டெல்லியின் முதல் முஸ்லீம் மன்னர் ஆவார். இந்த வம்சத்தை அடிமை வம்சம் என்று வரலாற்று ஆசிரியர்களால் அறியபடுகின்றது.




ராய் பித்தோர கோட்டையில் உள்ள 27 ஹிந்து மற்றும் ஜெயின் ஆலயங்களை இடித்து மசூதியை உருவாக்கினார். தற்போதும் நாம் குதிப் மினாரில் இதனுடைய மிச்சங்களை காணலாம்.





இந்த கோட்டையில்  பெரிய கல் தூணை கட்ட ஆரம்பித்தார். அவர் தரைதளைத்தை மட்டும் கட்டினார். அதன் பிறகு இல்டுமிஷ் 3 தளங்களையும், பெரோ ஷா இறுதி தளைத்தையும் கட்டி முடித்தனர். இது தான் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கல் தூண் (உயரம் 72.5 மீ). இவர் கட்டிட கலையில் மிகுந்த ஆர்வம் காட்டினார். டெல்லியிலும், லாகூரிலும் மசூதிகளை கட்டினார். 1210 ஆம் ஆண்டு போலோ விளையாடும் பொழுது குதிரையிலிருந்து கிழே விழுந்து இறந்தார்.

    

இதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஆரம் ஷா, ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. அவரது நிர்வாக திறமையின்மை காரணமாக, அவரது மந்திரிகள் அவர் மீது அதிருப்தி அடைந்தனர். பாடுன் (Baduan) நகரின் கவர்னர் சம்சுதீன் இல்டுமிஷ்ஷை, ஆரம் ஷா மீது போர் தொடுக்க அழைத்தனர். போருக்கு பின்னர் இல்டுமிஷ் டெல்லியின் சுல்தான் ஆனார்.

இவர் குத்புதினின் அடிமை, போர்களில் இல்டுமிஷ்ஷின் திறமையால் கவரப்பட்ட குத்புதின் தனது மருமகன் ஆக்கினார். பின்பு பாடுன் கவர்னர் ஆனார். அவர் கட்டிட கலைகளோடு, கவிதைகளிலும் நாட்டம் கொண்டு இருந்தார். பல போர்களில் வெற்றி பெற்று சிறந்த மன்னராக விளங்கினார். 




1236 ஆம் ஆண்டு வரை டெல்லி அரியணையை அலங்கரித்தார். மரணபடுக்கையில் தனது மகன்கள் மீது நம்பிக்கை இல்லாமல், மகள் ரஸியாவை மன்னராக அறிவிக்க வேண்டும் என கூறினார். அவரது மந்திரிகள் இதை ஏற்காமல் இல்டுமிஷ்ஷின் மகன் ருக்னுதீனை சுல்தான் ஆக்கினார்கள். ருக்னுதீன் ஆறே மாதத்தில் தனது தங்கையிடம் ஆட்சியை இழந்தார். 

ஸியா சுல்தான், 1236 ஆம் ஆண்டு டெல்லியின் சுல்தான் ஆனார். இவர் டெல்லியின் முதல் மற்றும் ஒரே பெண் சுல்தான் ஆவார். இவர் தன்னை சுல்தானா என அழைப்பதை விரும்பவில்லை ஏன் என்றால் சுல்தானா என்பது சுல்தானின்  மனைவியை குறிக்கும் வார்த்தையாகும், தன்னை சுல்தான் என்றே அழைத்துக்கு கொண்டார். இவர் சிறந்த ஆட்சியாளராக விளங்கினார். பல நூலகங்கள், பள்ளிகள் திறந்தார். 


      
மந்திரிபிரதானிகளுக்கும், படைதலைவர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய சுல்தானா, ஜமாலுதின் யாகுத் என்ற ஆப்ரிக்க அடிமை வீரனிடம் காதலில் வீழ்ந்தார். ஏற்கனவே ஒரு பெண் சுல்தான் ஆனதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இருந்த பிரபுக்கள் இவர்கள் காதலை எதிர்த்தனர். பட்இண்டா (Bhatinda) கவர்னர் மாலிக் அல்துனியா தலைமையில் போர் தொடுத்தனர். இதில் சிறப்பு அம்சமே அல்துனியா ரஸியாவின் குழந்தைகால தோழர் ஆவார்.

அந்த போரில் யாகுத் கொல்லபட்டார். அல்துனியா, ஸியாவின் அழகில் மயங்கி திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் ஸியாவின் சகோதரன் பஹரம் ஷா, பிரபுகளின் உதவியோடு ஆட்சியை கைப்பற்றினார். 1240 ஆம் ஆண்டு, அல்துனியா-ஸியா இருவரும் சேர்ந்து பஹரம் ஷா மீது போர் தொடுத்தனர். போரில் தோற்று கைத்தல் எனும் இடத்திற்கு தப்பி சென்றனர். அங்கே ஜட்களால் கொள்ளை அடிக்கப்பட்டு பின்பு கொல்லபட்டனர்.

ஒன்றரை பஹரம் ஷாவின் ஆண்டு கால ஆட்சி சொல்லி கொள்ளும்படியாக இல்லை. மங்கோலியர்களின் படையெடுப்பின் பொழுது லாகூரை இழந்தார். பிரபுக்கள் புரட்சி செய்து 1242 ஆம் ஆண்டு இவரை கொன்றனர்.

இல்டுமிஷ்ஷின் இன்னொரு மகன், அலாவுதீன் மசுத் சுல்தான் ஆக்கபட்டான். பிரபுகளின் கைப்பாவையாக இருந்தான். 1246 ஆம் ஆண்டு பிரபுக்களை எதிர்த்த பொழுது, அவர்களால் கொல்லப்பட்டான். பிரபுக்களில் முக்கியமாக இருந்தவர் பல்பன். இவர் தனது மகளை இல்டுமிஷ்ஷின் இன்னொரு மகன் நஸ்ருதின் முஹம்மதுவிற்கு திருமணம் செய்து கொடுத்து இருந்தார். நஸ்ருதின் மன்னரானார். அவர் மத வழிபாடுகளிலும் ஏழைகளுக்கு உதவுவதிலும் தனது நேரத்தை செலவிட்டார். ஆட்சி பொறுப்பு முழுவதும் அவரது மாமனார் பல்பன் பார்த்துக்கொண்டார்.

1266 ஆம் ஆண்டு நஸ்ருதின் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தார். அவருக்கு பின் பல்பன், தனது 60வது வயதில் தன்னை சுல்தானாக அறிவித்துக்கொண்டார். 

இவரும் ஒரு அடிமை வீரனே, அவர் ஆட்சிக்கு வந்ததும் பிரபுக்களின் அட்டகாசத்தை  ஒடுக்கினார். பிரபுக்களின் அதிகாரத்தை குறைத்தார். தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுத்தார். நீதி வழங்குவதில் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டார். ஒரு முறை குடித்து விட்டு ஒரு அடிமையை கொன்ற ஒரு பிரபுவை, அந்த அடிமையின் மனைவி முன்னிலையில் மரண தண்டனை அளித்தார். 1287 வரை சிறப்பாக ஆட்சி செய்தார்.   




பல்பனின் சமாதியை மெஹருளி, குதுப் மினார் அருகில், ஜெயின் தாதாவரி (Jain Datavari) கோவில் நுழைவு வாயிலிருந்து, சாலையை கடந்து சென்றால் காணலாம்.      
  
பல்பன் ஆட்சிக்கு பிறகு, ஒரு பிரபுவின் மகன், முஹம்மது கைகுபாத் சுல்தானாக ஆட்சியில் அமர்ந்தார். ஆட்சி பற்றி சிறுதும் அக்கறை இல்லாமல் இருந்தார். சதா கேளிக்கையில் மூழ்கி இருந்தார். 1290 ஆம் ஆண்டு பக்கவாதம் தாக்கி தனது மூன்று வயது மகன் கைமூர்த்தை சுல்தான் ஆக்கினார். பிறகு கில்ஜியால் கொல்லபட்டார். குழந்தை கைமூர்த்திடம் இருந்து ஜலாலுதின் என்ற மாலிக் பெரோஸ் கில்ஜி டெல்லி அரியணையை பறித்துக்கு கொண்டார்.   
   
சுமார் 97 ஆண்டு காலம் டெல்லியை ஆண்டு வந்த அடிமை வம்சதின் ஆட்சி முற்று பெற்றது. இந்த வம்சத்தில் ஸியா சுல்தானாவை தவிர எந்த வாரிசுகளும் சிறப்பாக ஆட்சி செய்யவில்லை. சிறப்பாக ஆண்ட மன்னர்கள் அணைவரும் தொடக்கத்தில் அடிமைகளாய் இருந்தவர்களே. 

                                                                                                              தொடரும்
                                                                                             - மகேஷ் பிரபு விஜயராஜ்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக