வெள்ளி, 31 ஜனவரி, 2014

வடக்கு நோக்கி ஒரு பயணம்

ஜன 26. குடியரசு தினவிழா அணிவகுப்பிற்க்கு செல்ல டிக்கெட் வாங்க முயற்சி பண்ணினோம். டிக்கெட் கிடைக்கவில்லை.

டெல்லி வந்த இந்த ஒரு வருடத்தில் நிறைய பயணம் செய்திருந்தாலும், மலைபிரதேசங்களுக்கு செல்லவில்லை என்பது ஒரு பெரும் குறையாகவே இருந்தது. சரி கிளம்புடா கைபுள்ளைனு சொல்லிட்டு நைனிடால் கிளம்பியாச்சு.

உத்ரஹாண்ட் மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஒன்று தான் நைனிடால் மாவட்டம்,  மாவட்ட தலைநகரும் நைனிடால் நகர் தான்.

இதுவரைக்கும் டெல்லில இருந்து எங்கேயும் பஸ்ல போனதில்லை, இந்த பக்கம் பஸ் பயணத்தை பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கேன். பான்பராக் போட்டு சீட் பக்கத்திலே எச்சி துப்புவாங்கன்னும், நம்ம முன்பதிவு செஞ்ச சீட்ல இருந்து எந்திரிக்க மாட்டாங்கன்னும் சொல்லி இருக்காங்க. ஒரு வித்தியாசமான அனுபவத்திற்கு தயாராகித்தான் போனேன். எந்த சாமி செஞ்ச புண்ணியமோ அப்படி எதுவும் இல்லை.

 நானும், நண்பர் அருணும், டெல்லி - ஹல்த்வானி பஸ்ல இரவு 9 மணிக்கு கிளம்புனோம். அதிகாலை 3 மணிக்கு ருத்ரபூர் எனும் இடத்தில் இறங்கினோம். ஒரே பனிமூட்டமா இருந்துச்சி, என்னத்த கண்ணையா சொன்ன மாதிரி இல்லைங்க, பயங்கர குளிர். பனியன், அதுக்கு மேல ஒரு டி-ஷர்ட், அதுக்கு மேல ஒரு சட்டை, அதுக்கு மேல ஒரு ஷ்வேட்டர், அதுக்கு மேல ஒரு ஜெர்கின், அதுக்கு மேல ஒரு ஷால், பின்னாடி ஒரு ஷோல்டர் பேக் மாடியும் குளிர் தாங்க முடியல. (தூத்துக்குடில வளர்ந்த பையனுக்கு குளிர்னா என்னங்க தெரியும்)      

ருத்ரபூர்  ஹல்த்வானிக்கு, 30 கி.மீ. முன்னாடி இருக்குது. இந்த ஊர் ஒரு விவசாய கிராமம், எங்க பார்த்தாலும் பச்ச பசேல்னு இருந்தது.
இப்போ 600க்கு மேல தொழிற்சாலைகள் வந்துருச்சி. கூடிய ஊரை சீக்கிரம் மொட்டை அடிச்சிருவாங்க.

சாலையின் ஒரு புறம் வயல்வெளி, மறுபுறம் அடுக்குமாடி குடியிருப்புக்கள்.






இந்த ஊர்ல விக்னேஷ்னு ஒரு நண்பன் இருந்தான். அவங்க வீட்ல போய் கொஞ்சமா தூக்கத்த போட்டுட்டு, ரெடி ஆகி 11 மணிக்கு அங்க இருந்து கிளம்பினோம்.

பங்கு ஆட்டோல ஹல்த்வானி போனோம். அப்புறம் ஹல்த்வானில இருந்து நைனிடாலுக்கு அரசு பேருந்தில் போனோம். போற வழில ஒரு எடத்துல, டிரைவர் பஸ்ஸ ஓசி சாப்பாட்டுக்காக (அவருக்குங்க) நிறுத்தினார். சுட சுட பக்கோடா இருந்தது, ஆஹா அருமை, அதைவிட மஞ்ச கலர்ல புளிப்பா, உரைப்பா ஒரு சட்னி வச்சிருந்தாங்க, அது இன்னும் அருமை. சாப்பிட்டுவிட்டு பஸ் ஏறினோம். 2 மணிக்கு நைனிடால் கொண்டு போய் விட்டாங்க.

நைனி தேவி கோவில் இங்கு உள்ளது. இது 64 சக்தி  பீடத்தில ஒன்று. அம்மனின் உடம்பில் இருந்து கண்கள் இங்கே விழுந்ததாக புராணம் சொல்கிறது.

நைனி என்றால் கண்கள், டால் என்றால் குளம். நைனிடால் என்றால் கண்களை போன்ற குளம்ன்னு அர்த்தம். உயரமான இடத்தில இருந்து பார்த்தா அந்த மாதிரி தான் தெரியுது. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 2000 மீ. உயரத்தில் உள்ளது.









இங்க இருந்து 50 கி.மீ. தூரத்தில் முக்திஷ்வரர் எனும் இடத்துக்கு போனோம்.
போற வழில, சில இடத்தில ஐஸ் உருவாகி இருந்தது. பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.













ஒருத்தர் வீட்டின் பின்புறம் பனி தூவல்..



மறுநாள் காலையில் நைனிடால் சுற்றி உள்ள இடங்களை பார்த்தோம்.
தூரத்தில் இமயமலையின் பனி படர்ந்த சிகரங்களை பார்த்த பொழுது உள்ளுக்குள் ஒரு சிலிரிப்பு, அப்படியே மெய் மறந்துட்டோம்.



மதியம் பீம்டால் எனும் இடத்திற்கு அருகில் பாராகிளைடிங்கில் சென்றோம். இது 1000 அடி உயரத்தில் பாராசூட் கட்டி, செங்குத்தான மலையிலிருந்து கிழே ஓட வேண்டும், காற்றின் விசையினால் நாம் பறந்து, தவழ்ந்து கிழே வருவோம். நம்மோடு அவர்கள் ஆள் ஒருவர் வருவார். அவர் திசை மற்றும் தரை இறங்குதலை பார்த்துக்கொள்வார்.




ஆரம்பத்துல கொஞ்சம் டரியலாக இருந்தது, அப்புறம் செம ஜாலியா இருந்தது. இதுல என்ன வருத்தம்னா ஜாலியா பீல் பண்றப்போவே கிழே இறங்கிருவோம். மொத்தமே 2 நிமிஷம் தான். அப்புறம் பீம்டால்ல ஒரு குளம் பார்த்துட்டு, ஹல்த்வானி வந்தோம்.

மறுபடியும் பங்கு ஆட்டோ ஹல்த்வானி -  ருத்ரபூர், Tata Ace வண்டில, டிரைவர சேர்த்து முன்னாடி 4 பேர், பின்னாடி 4+4, அதுக்கு பின்னாடி 4 பேர். மொத்தம் 16 பேர் வந்தோம். பூட் போர்டு அடிச்ச ஒரு சராசரி தமிழனுக்கு, இந்த ஆட்டோல இடம் பிடிக்கிறது ரெம்ப சவாலான விஷயமா இருந்தது. நண்பன் விக்னேஷ் தான் இடம் பிடிச்சி குடுத்தான்.          

ருத்ரபூர் வந்து இரவு 10 மணிக்கு ரயில் பிடித்து டெல்லி வந்து சேர்ந்தோம்....



  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக